Saturday, March 1, 2014

துருவகற்றி உமரின் வாளை துணிவோடு தூக்குங்கள்


Share/Bookmark
மெல்லத்தமிழெடுத்து
நல்ல கவியெழுத
அள்ளியருள் செய்தவனே

பள்ளிப் பயல் உன் பெயர்
சொல்லித் துவங்குகிறேன்

சரஞ் சரமாய்க் கவிதை செய்து
சகல‌ரையும் நான் நனைக்க‌
சங்கத் தமிழ் தருவாய்
சகலதும் தருபவபனே

அல்லஹ் உன் தூதை
அன்பாய் ஏற்றவர்
அவரைத் தொடர்ந்தோர்
அகிலம் முடியும் வரை
அதன் வழியில் வாழ இருப்போர்

அனைவருக்கும் சொல்லுகிறேன்
அஸ்ஸ‌லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு


மறை தந்தவன் பெயர் போற்றி
மா ந‌பி மீது ஸ‌லவாத்துச் சொல்லிவிட்டேன்
மறைவாக நிற்கின்ற மணித்தமிழே
மடை திறந்து ஓடிவா

அபிசீனியா என்றென்னி
அரபி உன்னிடம் வந்தோம்
அமெரிக்கவின் அடிவருடி - நீ
அடைக்கலமில்லையென்றாய்

தாயிப் வீதிகளில் நின்று
தாறுமாறாய்க் கல்லெறிந்து
தஞ்சமில்லையென்று
தகராறு செய்தாய்


உன்
தொப்புள் கொடி உறவுகள் - அங்கே
அப்பிள் மரத்தடியில் புதைந்து போக‌

நீ
கோதுமை வயலில்
கோப்பை மதுவோடு
கொண்டாடிக் களிக்கிறாய்

உன்
இரத்தச் சிறார்கள் - சிரியாவில்
நித்தம் சாகையில்
நீ
கத்தம் ஓதிக்
கந்தூரி வைக்கிறாய்

அங்கே காஸா வெளிகளில்
அழகான என் தங்கையின்
அபாயா களைந்து
அசிங்கம் செய்கையில்

அண்ணல் நபி பெயரில்
ஆயிரம் விழாச் செய்து
ஆன‌ந்தம் கொள்கிறாய்

புத்தரின் பெயர் போற்றும்
பூருமா மண்ணில்
கொத்துக் கொத்தாய்க்
கொடுமை செய்ய‌
போக்கிடமின்றிப்
பொசுங்கிச் சாக‌
போத்தலில் நீர் கொடுத்து
போய் விடச் சொல்கிறாய்

ஹரமைனைக் காப்ப‌வனென்று
மார் தட்டி மகிழ்கின்றாய்
மடைய‌ன் சீசிக்கு
மஹர் கொடுத்து
மச்சான் என்றும் சொல்கிறாய்


ஏகத்துவம் பேசுகிறாய்
ஏகாதிபத்தியம்
எப்படி உன்னில் கலப்பது

ஓரிறை என்று
ஓதித் திரிகிறாய்
ஒழுங்கீனம் எப்படி
உன்னில் கலப்பது

காத்தான்குடிப் பள்ளியென்ன‌
கஃபாவை உடைத்தால் கூட
கவலைப்பட மாட்டார்கள் - இந்த
கலியுகக் கலீபாக்கள்

(அன்றைய) மக்கத்துக் காட்சிகளை
(இன்று) மதீனாவில் கண்டது போதாதா

மறுமலர்ச்சி கான
மதீனா ஒன்றே தீர்வு

உம்மத்தே முஹம்மதே
உஹதும் பத்ரும்
உன்னை அழைக்கிறது
உயிர்ப்பிக்க வாருங்கள்

தரங் கெட்ட கொள்கையெல்லாம்
தரணியாள‌
தரணியாள வந்த மார்க்கம்
தனக்குள் வாழ்வதா

தீனே இஸ்லாத்தை
திசையெங்கும் பரப்புவோம்
திங்கள் தரையிலும்
தீன்கொடியேற்றுவோம்

தவமாய்க் கிடந்த தவங்களும்
தானாய் வள்ர்ந்த தாடியும்
தலைக்கணிந்த தொப்பியும்
தரித்திரம் பிடித்த முரண்பாடும்


துச்சமாய்க் களைந்து
தூக்கி எறியுங்கள்

துருவகற்றி உமரின் வாளை
துணிவோடு தூக்குங்கள்

உணர்ந்ததைத்தான் நானுரைத்தேன்
உணர வேண்டுமென்பதற்காய்

கண்டும் காணாதவராய்
கவலையற்று வாழ்வோரே
கேளீர்

களமிறங்கிக் களையகற்ற‌
களமேறிக் கொடியேற்றக்
கவி பாடி வாரீர் - இல்லை
கற்பனைதான் வாழ்க்கையென்று
கடற்கரையில் கோட்டை கட்டி
க்ண்ணீரில் சாவீர் - என்
கவிதைகளின் சாட்சியத்தில்
(நாளை)
நரகப் படுகுழியில் வீழ்வீர்


உடல் மயிரெல்லம்
உயிராயிருந்து
ஒவ்வொன்றாய் அது துற‌ந்து
ஒப்பிலா சுவனம் நுழைவேனென்ற‌
அபூ ஹுதைபாவின் பேரர்களே

முஷ்தாகுன் இலல் ஜன்னா  என்று
முன்டியடித்து சுவனம் போன‌
நொண்டிக்கால் சஹாபி
அம்ரு ப்னு ஜமூஹின் வாரிசுகளே

மணமுடித்து மறு நாளே
மாப்பிள்ளைக் கோலத்தில்
மரணத்தை வென்ற ஹன்ழலாவின்
மாப்பிள்ளைத் தோழர்களே

மூட்டப்பட்ட தீயை
முதுகுத் தண்ணி அணைத்த போதும்
முஸ்லிமாகவே மரணித்த‌
ஹப்பாப் ப்னு அரதின்
முஹம்மதியச் சகோதரரே

மூர்க்கத் தனமாய்
முஷ்ரிக்குகள் தாக்க‌
மூர்ச்சையாகிப் போன
முதற்பெண் சுமையாவின்
முன்மாதிரி யாசிரின்
மூத்த பிள்ளைகளே

அன்றைய
அலி, அபூபக்கர்
உமர், உஸ்மானின்
உத்தமக் குழந்தைகளே

சரித்திரம் படைத்த
ஸலாஹுத்தீன் ஐயூபியின்
சத்திரியக் குமரர்களே

நீளக் கண்ணுடைய
நிரந்தரக் குமரிகளால்
நிரம்பி வழிகிறது சுவனம்

நீயும் நானும்
நித்தியத்தில் வாழலாம்
நித்தியன் அவனைக் காணலாம்

அச்சம் களைந்து
அகிலம் ஆளுவோம்
அன்பனே ஆடி வா
அழகுத்தமிழில் பாடி வா

ஆள் கடலோடி
அறிவைத் தேடி வா

நாளை மறுமையில்
நான் பாடும் கவிதைக்கு
நடமாடும் சாட்சியாய்
நண்பனே நீ வா.


இன்றைய இரவை நான் அதிகம் அஞ்சுகிறேன். எனது உறவுப் பால் வீதியில் ஒரு நட்சத்திரம் குறைந்து இன்றோடு நாட்கள் எட்டு. அதை நாளைய விடியலின் கிரணங்கள் அடைந்து விட முடியாத அறையொன்றில் புதைத்து வந்திருக்கிறேன். நான் முத்தா என்று பாசமாக அழைத்து மகிழ்ந்த என் பாட்டன் ஷேகு அப்துல் காதர் செய்னுத்தீனுக்கு இது சமர்ப்பணம்.

ஜாமிஆ நளீமிய்யாவின் 1வது கலை விழா தேர்வுப் போட்டியில் முதலிடம் பெற்று கலைவிழா 2014 இல் மேடையேற்றப்பட்டது.