Sunday, February 2, 2014

'அஊது பில்லாஹி மினஷ் ஷெய்த்தானிற்றஜீம்'


Share/Bookmark






















11012014

அவன் எனது எதிரியென்று
அத்தனை தடவை சொன்ன போதும்

அவனை விரட்டுவதற்கான
அவ்வளவு முயற்சிகளையும் செய்த பிறகும்
..............

அவன்

நான் சாப்பிடும் போது
எனது உணவுத்தட்டின்
எதிர் முனையில் அமர்ந்து
என்னோடே சாப்பிடுகிறான்

படுக்கையறையில்
எனது போர்வைக்குள்ளேயே
புகுந்து கொள்கிறான்

எனது கனவுகளை
எப்படியெல்லாமோ மாற்றிவிடுகின்றான்

தொழுகையில்
எனக்கு மிகச் சமீபமாக
நின்று கொள்கிறான்

அவன் என்னோடு
எந்த சமரசத்தையும்
செய்து கொள்ளவில்லை

ஆனால்
எனது எல்லாப் பயணங்களிலும்
என்னோடு அமர்ந்து கொள்கிறான்

என்னை விட அதிகமாக
எனது உள்ளத்தோடு
உரையாட முயற்சி செய்கிறான்

ஒரு புத்தகத்தில்
ஏதோ ஒரு பந்தியில்
அமர்ந்தே இருக்கிறான்

புனித நூலுக்குள்ளே
அவனில்லையென்ற போதும்

அதனை ஓதும் போது
அதனைச் சூழ
அத்தனை இடங்களிலும்
நிறைந்து விடுகிறான்

எனது தனிமைகளில்
என்னை முழுமையாக
பயன்படுத்த முயற்சிக்கிறான்

நான் பார்வையிடும்
வலைத் தலங்களை
நுனுக்கமாக அவதானிக்கிறான்

முக நூலிலும்
மிக நெருக்கமாகவே
பழகி வருகிறான்

கழிவறைகளில்
மிகச் சுதந்திரமாக
என்னோடு தோழமை கொள்கிறான்

ஆனாலும்
ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும்
நான் சொல்லிக் கொள்ளவே செய்கிறேன்
'அஊது பில்லாஹி மினஷ் ஷெய்த்தானிற்றஜீம்'11012014

No comments:

Post a Comment