Wednesday, May 6, 2015

இலங்கையில் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை.


Share/Bookmark
திரையரங்குகளில் சங்கமமாகும்
தீனின் புதல்வர்களென்றும்....

மதுக்கடையில் மண்டியிடும்
மார்க்கச் சகோதரர்களென்றும்...

சந்தையில் சண்டையிடும்
சமூகத் தொண்டர்களென்றும்...

போதைப் பொருளில் புதைந்து போகும்
பொரறுமையின் சிகரங்களென்றும்...

இண்டர் நெட்டில் இழிந்து போன
ஈமானிய உள்ளங்களென்றும்...

அரசியல் அடியாளான
அடிமைப் பேடிகளென்றும்...

கண்டதெல்லாம் காட்சியாக,
கொண்டதெல்லாம் கொள்கையாக,
மண்டைக்கு சம்பந்தமில்லாமல்,
தொண்டையால் கத்தித் திரியும்,

களிமண் பிண்டங்களென்றும்
கற்பனை செய்து....

இளைஞரைப் பற்றி
இழிவுக்கவி செய்கிறார்கள்...

இளைஞரென்றால்
இத்தனை கேவலமா...???
..........

இமாலயச் சாதனைகளை
இமைப் பொழுதில் முடிக்கும்
இலங்கைத் தாய் ஈன்ற
இளைஞர் குலம் பற்றி

இனிய கவி செய்து
இயம்புகிறேன் கேளுங்கள்...

சந்ததி உருவாக்கத்தில்
சாதனைகள் செய்பவன்,
சமகால இளைஞர்களென்று
சத்தியமிட்டுச் சொல்லுகிறேன்.

கடந்த காலம் நடந்த
கலவரத்தின் போது
காடையர்களை எதிர்த்து,
களத்தில் பலியாகி,
கண்மூடி ஷஹீதானவன்
கலிமா சொன்ன இளைஞன்...*

இஸ்லாமியம் பேசும்
இலக்கிய மாநாட்டில்,
சர்வதேச மேடையில்
சன்மார்க்கம் பேசியவன்
இலங்கையில் பிறந்த
இளைஞன் அஸ்மின்...**

முழு நேர ஊழியனாய்
முஹம்மதின் உம்மத்தை
முதுகில் சுமப்பவன்
முஸ்லிம் வாலிபன்...***
............

சத்திய மார்க்கத்தையும்
சமூக மாற்றத்தையும்
தலை மேல் தாங்கும்
தன்னலமற்ற சேவகன் யார் ? ? ?

ஷபாப் என்ற பெயரில்
சங்கம் அமைத்து
சமூகப் பணி செய்பவன் யார் ? ? ?****

வாமி எனும் பெயரில்
வருங்காலம் வளம் பெற
வகை வகையாய் உழைப்பவன் யார் ? ? ? *****

வாலிபர் சங்கம் இல்லாமல்
வளர்ச்சி கண்ட ஊருண்டா ? ? ?
பணிகள் செய்த
பள்ளி நிருவாகம் உண்டா ? ? ?

தங்கை தங்கையென்று
தனது வயதை மறந்து
திருமணம் செய்யாத
தியாகச் செம்மல்கள் யார்

தாய்க்கும் தாரத்துக்கும் மத்தியில்
தனியனாய்ப் போராடும்
தன்னார்வத் தொண்டனை

தட்டிக் கழிக்கவா
தம்பட்டம் அடிக்கிறீர்கள்......

சங்கத் தமிழ் செய்து
சன்மார்க்கப் பணி செய்யும் நான்
இப்புவியுலகில் இருக்கும் வரை
இம்மியளவும் விட மாட்டேன்

இளைஞர்களை வாழ்த்தி
இனிதே முடிக்கிறேன்...
15 02 2015

......................................................................................................................
* அளுத்கம கலவரம்
** கோலலம்பூர் சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு
*** full timers
**** ஜமிய்யதுஷ் ஷபாப்
***** world assembly of Muslim youth


........................................................................................................................................................
ஜாமிஆ நளீமியாவின் வெளிக்களப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் -2014- கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை.

No comments:

Post a Comment