Friday, June 28, 2013

சுவனம், நான், மரணம்


Share/Bookmark

முன்னால்
தொலை தூரத்தில் சுவனம்

பின்னால்
தொடு தூரத்தில் மரணம்

சுவனம்
நித்தியப் புள்ளியொன்றில்
நிலைத்திருக்கிறது

நான்
நகர்ந்துகொண்டிருக்கிறேன்

மரணம்
நெருங்கிக் கொண்டிருக்கிறது
.............

சுவனம்
நான்
மரணம்


என்ற முப்புள்ளியில்
எல்லோர் வாழ்க்கையும்

நிர்ப்பந்தங்களைச் சுமந்த படி
நிச்சயமின்மைகளைத் தேடி
நீண்டு செல்கிறது

இடைவெளிகளில் தான்
இருக்கிறது வித்தியாசம்

20062013

Friday, June 14, 2013

'கொல்' என்பாயோ ?


Share/Bookmark


கொக்கரக்கோ கூச்சலிட்டு
கொக்கரித்து நின்றபோதும்
கொக்குப் பயலே
கொச்சைச் செருப்பு
கொஞ்சிச் சென்றது
'கொல்' என்பாயோ?

பட்டினி கிடந்த பச்சைக் குழந்தை
பல்லிளிக்குது உனைப் பார்த்து
பச்சோந்திப் பாவியே
பண்டங்கள் வேறின்றியா
பட்டணத்துச் செருப்பு
பழிவாங்கியது உன்னை

அண்டத்தைப் படைத்து
அண்டமுள்ளவற்றைப் படைத்து
அண்டங் காப்பான்
அண்டத்தை ஆட்டி
அரசாட்சிய உன்னை
அகற்றும் நேரமிது


எங்கள் தேசம் (பெப்ரவரி 15-28, 2009) 143 வது இதழில் வெளிவந்த கவிதை

என் கவிதையும் அழுதது


Share/Bookmark


ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

இருநூற்று நாற்பது கண்கள்
விதவையானதும்
ஒரே வீட்டில் தாயும் மகளும்
'இத்தா' இருந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

நூற்றி இருபது 'கப்று'கள்
ஒரே மண்ணில் தோண்டப்பட்டதும்
ஒரே நொடிப் பொழுதினில்
தந்தையும் மகனும் 'கலிமா' மொழிந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

விடுதலைப் புலிகள் வீரமிழந்து
முதுகில் சுட்டதும்
ஏகே போட்டிசெவன்கள்
தலை குனிந்து நின்றதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

புலியின் குணம் கண்டு
காட்டுப் புலி குனிந்ததும்
மனிதப் புலி மிருகம் என்று
ஊர் கூடிச் சொன்னதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

'ஷகீது'களுக்காய்
காத்திருந்த சுவனத்தில்
'ஷுஹதா'க்கள் நுழைந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

செந்நீர் வடிந்தும்
கண்ணீர் வடிக்காத
பாலகர் இறந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

தொழுகைத் தளங்களில்
இரத்தம் வடிந்ததும்
ஹசன் ஹுசைன்கள்
ஷஹீதாய் ஆனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

பள்ளி நிலம்
செம்மையானதும்
வெள்ளி நிலா
வெளிறிப் போனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

அந்த இரவிலே
காத்தான்குடி அழுதது
கப்றுக்குழி அழுதது

ஷுஹதாக்களால்
சுவனம் நிறைந்தது
ஷஹீதுகள் இன்றி
பூமியும் அழுதது

ஒரு சில இரவுகளில்
நாணும் அழுவதுண்டு
அந்த ஒரேயொரு இரவுக்காய்

பல நாள் கண்ணீர்
அன்று கவிதையாய் எழுந்தது
நேற்று இரவுக் கண்ணீரில்
பாதிக்கவி கரைந்தது
மீதிக் கவி இன்று
உங்களுக்காய்

அந்த இரவில்
பூக்களும் அழுதன
என்னோடு
என் கவிதையும் அழுதது

கல்நெஞ்சக் காறரே!
இன்றேனும் கொஞ்சம்
அழுது விடுங்கள்
இன்றைய இரவில்
காத்தான்குடியை
மீட்டிப் பார்ப்பேன்

2009-11-19

கொடிகள் பறக்கின்றன‌


Share/Bookmark


சிங்கள பூமியிலே
சிங்கக்கொடி பறக்குது
சிவந்த மண்ணிலே
சிரித்து விளையாடுது

கேட்ட தேசத்திலன்றி
கேளா தேசமனைத்திலும்
புலிக்கொடி பறக்குது
புனர்வாழ்வு கேட்குது

2009-11-13

கவிதாறுதல்


Share/Bookmark


கண்ணாடி பார்த்தேன்
முகம் அந்நியமானது
பாதையில் நடந்தேன்
செருப்பே அறுந்தது

புற்களில் படுத்தேன்
முள்ளாய்த் தைத்தது
பூக்களை மணந்தேன்
தும்மலே வந்தது

மரத்திலே அமர்ந்தேன்
கொப்பு முறிந்தது
தண்ணீர் அருந்தினேன்
உப்புக் கரித்தது

காற்றோடு பேசினேன்
பேச மறுத்தது
காதல் செய்தேன்
கசப்பாய் இருந்தது

காகிதம் கிழித்தேன்
வெள்ளையாய் இருந்தது
பேனையை எடுத்தேன்
தானாய்த் திறந்தது

மூளையைக் கசக்கினேன்
கவிதை சிரித்தது
கவிதையை எழுதினேன்
காகமும் சிரித்தது

மரம் பணிந்து அழைத்தது
மூக்கைத் தேடி பூவே வந்தது
தண்ணீர் தேனாய் இனித்தது
செருப்பு என்னையே சுமந்தது

புற்கள் மெத்தையாய் ஆனது
கண்ணாடி என்னைப் பார்த்தது
என்னோடு காதல் கலந்தது
காற்று காதோரம் இசைத்தது

2009-11-16

நான் வாழ்வதற்கு


Share/Bookmark


தசரதனைப்போல்
மனைவிகள் தேவையில்லை
காந்தாரி போல்
குழந்தைகள் தேவையில்லை

கண்ணனைப்போல்
அவதாரங்கள் தேவையில்லை
கர்ணனைப்போல்
புண்ணியங்கள் தேவையில்லை

சுற்றிலும் இயற்கை
சூழ்ந்திருக்க வேண்டும்
அன்னையும் பிதாவும்
அருகிருக்க வேண்டும்

அன்பிற்கொரு மனைவி வேண்டும்
ஆசைக்கொரு குழந்தை வேண்டும்
குடியிருக்க குடிலொன்று வேண்டும்
கோமணமேனும் கட்டியிருக்க வேண்டும்

இன்பத் தமிழ் வந்து காதில் பாய வேண்டும்
இஸ்லாத்தோடு சேர்ந்திருக்க வேண்டும்
இலக்கியத்தில் மூழ்க வேண்டும்
இறையருள் கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை முடியும்வரை
வண்ணக் கவிதைகளும்
இன்பத் தமிழ் மொழியும்
காதோரம் கேட்க வேண்டும்

கடைசி நேரம் வர
கடமை முடிந்திருக்க வேண்டும்
'கலிமா' வாயில் வர வேண்டும்
கண்ணியமான மரணம் வேண்டும்

2008

கவிஞன்


Share/Bookmark


மலர்ந்தும் மலராத பாதி மலர்
மலரும் வரை காத்திருப்பான்
விடிந்தும் விடியாத விடியல்
விடியும் வரை விழித்திருப்பான்

கண்டும் காணாத காட்சியை
கற்பனை செய்திடுவான்
புரிந்தும் புரியாத வரிகளை
புனைந்து வரைந்திடுவான்

கனத்தும் கனக்காத கருவின்
கனத்தை அறிந்திடுவான்
வளர்ந்தும் வளராத பிஞ்சு
மனதையும் உணர்ந்திருப்பான்

வளைந்தும் வளையாத மூங்கில்
வளைவினை இரசித்திருப்பான்
பிரிந்தும் பிரியாத பிரியன்
பிணத்தைப் பாடிடுவான்

வலித்தும் வலிக்காத வசை
வரைந்து வைத்திடுவான்
வடிந்தும் வடியாத சொல்லில்
வடிவமே அமைத்திடுவான்

2008

தொண்ணூறை மீட்கட்டும்


Share/Bookmark
அகதி நாமம் கொண்ட
ஆன்மீகக் கவிஞன்
அகத்திமுறிப்பானின்
ஆசை மகன் நான்

வேத்திய நாமம் கொண்ட
வேங்கைக் கவிஞன் நான்

தாய் மொழியாய்
தமிழைக் கொண்டு
வடக்கையே என்
தாயாய்க் கொண்டு

நான் எழுதும் இவ்வரிகள்
தொண்ணூறை மீட்கட்டும்

பதினெட்டாண்டுகள்
பழமை வாய்ந்தும்
பளிச்சென்று தெரியும்
பழங்குடிக் கதையையும்
பாழ் கிணற்றில் நாம் வீழ்ந்து
பாழாய்ப்போன கதையையும்

நான் எழுதும் இவ்வரிகள்
நன்றாகவே மீட்கட்டும்

பத்தடித் தூண் கட்டி
அரைவட்ட வாசல் இட்டு
வண்ணமாய் நிறந் தீட்டி
பச்சை நிறச் சுவர் காட்டி

வாவென்று அழைத்திடவே
'பாங்கு' சொல்லும் பள்ளிகள்
வழமையாகச் சொல்லுது 'பாங்கு'
வானுயர எல்லோர் ஊரிலும்

போவென்று சொன்னதாக
சரித்திரம் இல்லை
வந்தோரைத் தடுத்ததாக
வாக்கியங்களும் இல்லை

தொண்ணூறைத் தவிர
ஏனைய நாட்களிலே

' இரு மணித்தியால அவகாசம்
உயிர் பிழைக்க உங்களுக்கு
ஓடிச் செல்லுங்கள்
ஊர் எல்லை தாண்டி'
'மோதினார்' மூக்காலே பேசுகிறார்
என்னுயிர் பிழைக்க
நானும் ஓடுகிறேன்

ஊர் மக்கள்
ஒன்றுகூட நேரமில்லை
ஒன்றுவிடாது
அடுக்கி எடுக்க நேரமில்லை
உடுத்த உடையோடு
உடுக்க உடை எடுத்து
வாலிபர்கள் சுமக்க பெண்களும் போறார்
கர்ப்பினிகளுடன் தாய்மாரும் போறார்
தந்தையோடு மகனும் போறார்
மகனோடு தந்தையும் போறார்
போன தந்தை திரும்பிப் பார்க்கிறார்

தாய் படுக்கும் இடம் பார்க்கிறார்
நாயும் பயந்து ஒதுங்குகிறது
பிறந்த மண்ணைப் பார்க்கிறார்
வளர்ந்த காலம் மீட்கிறார்
வஞ்சினம் கொள்கிறார்
பயனில்லை நடக்கிறார்

ஏ வடக்கின் வாலிபர்களே!
முடிச்சு தூக்கியதால்
முதுகெலும்புகள் வளைந்தனவோ
அன்றி
ஆன்மீகம் குறைந்ததனால்
ஆண்மையையும் இழந்தீரோ

வேளை வந்துவிட்டது
புறப்படுவோம் நாம்
நம் தாயகம் காக்க

2008-11-03


எங்கள் தேசம் (ஜுலை 15-31, 2009) 153 வது இதழில் வெளிவந்த கவிதை

அமைதியாய் ஆர்ப்பரிப்போம்


Share/Bookmark


உம்மா . . . .
உன்னைத் தினம் காண்கிறேன்
உன் அகத்தின் அழகு
முகத்தில் தெரியுதும்மா

இன்னும் என்னை
குழந்தையாய் நினைக்கிறாய்
இரவு பகல் அழுவதை
அகத்தினிலே புதைக்கிறாய்
முகத்தினிலே சிரித்து
உன்னை மழுப்புகிறாய்

கண்ணீர் நனைத்த
முந்தாணையை முட்டியில்
விழுந்ததென்கிறாய்
நம் வீட்டு முட்டியில்தான்
உப்பு உற்பத்தியா?

எந்தையை வாட்டும் அந்த
உன்னதக் கவலைதான்
உன்னையும் வாட்டுதா?
ஊருக்குப் போகத்தான்
உன் உள்ளம் ஏங்குதா?

ஊரைப் பற்றி நானறிவேன்
எந்தையவன் உளறிவிட்டான்
விரட்டியோரைச் சொல்லிவிட்டான்
கயவர்களைக் காட்டி விட்டான்

உன் அழுகை புலம்பலெல்லாம்
என் ஏட்டில் கவியாகும்
நீ வடிக்கும் விழிநீர் சொட்டும்
என் பேனை மையாகும்

நான் எழுதும் ஓரெழுத்தும்
வன்னிக்குப் போர் தொடுக்கும்
போர் தொடுத்த இடமெல்லாம்
நம்மவர்க்கு உரித்தாகும்

எந்தையின் எழுத்தெல்லாம் வான்படை
உன் விழி கொட்டும் நீர் கடற்படை
என் எழுத்து, கவியெல்லாம் தரைப்படை
மொத்தம் முழுப் போரில் அமைதிப்படை
2009-10

ஏனும்மா . . . .


Share/Bookmark


ஏனும்மா . . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் அருந்தியதெல்லாம்
வெளிநாட்டில் வெந்த மாவை
வெள்ளையாய்க் கரைத்த
கரைசலும்மா வெறும்
பசிக்குத் திருப்தியும்மா

சொந்த ஊரில்
சொந்தப் பட்டியில்
எந்தை கறந்த பாலை
சூடாக்கி மோராக்கி
நீயருந்திப் பாலாக்கி
எனக்கூட்டலியே

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
தரும்போதும் தடுக்கலியே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் படுத்த திண்ணையெல்லாம்
தந்தைக்குச் சொந்தமில்லை
தற்காலிகத் தரிப்பிடம்தானே

எந்தையவன் தந்நாட்டில்
சொந்த நிலம் இல்லையா?
இருந்தும் இடமில்லையா?

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
கால் நீட்ட மறுக்கலையே

நான் குளித்ததெல்லாம்
நிறமில்லா நீரில்தானே
எம் முன்னோர் தாண்டெழுந்த
பெருங்காட்டுக் குளமல்லே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்
மூத்தவன் பெற்ற இன்பம்
காலில் துளியும் எனக்கில்லை.

2009-10

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் வெளியிட்ட 'தமிழ் நயம் - 2009' இதழில் வெளிவந்த கவிதை