கவிதைச் சிறுகதைகள்


Share/Bookmark
ஒற்றைக் கட்டிலில்

உயிர்போன கவலை
உனக்கொன்றுமில்லை
பிணமாகக் கிடக்கிறாய்
பிதற்றாமல் தூங்குகிறாய்

உன் உடலைப் பார்த்து அழ
வந்திருக்குது உயிர் பல
உன் குறைநிறை சொல
காத்திருக்குது இன்னும் சில

உயிர் பிரிந்த உன் வீட்டில்
உணவு தேடிச் சில கூட்டம்
உயர்ந்து சாய்ந்த உன் கூட்டில்
உல்லாசம் காண சில கூட்டம்

இளம் பெண் மனைவிக்கு
இறந்த செய்தி தெரியாது
வீட்டைக் காக்க சென்றவளுக்கு
விதவைச் செய்தி தெரியாது

பிள்ளைபெற்ற தாயின் குரல்
பிணத்தைக் கண்ட உயிரின் குரல்
பின்னிசையாய்த் தூரக் கேட்குது
பின்னேரக் காற்று வீசுது

வேலை முடிந்து ஓய்வு கொடுக்க
வீட்டை நோக்கி கால்கள் நடக்க
பின்னிசை தாயின் குரல் தூரக் கேட்க
பக்கத்து வீட்டில் துக்கம் என மனம் நினைக்க

பதறித் துடித்து ஓட்டம் பிடித்து
ஓடி வருகிறாள் பல்லைக் கடித்து

ஓலக் குரல் ஓங்கி ஒலிக்குது
ஓப்பாரி கொஞ்சம் தெளிவாய்க் கேட்குது
மாமியார் குரலென்று காது சொல்லுது
மருமகளின் மனம் அதனை ஏற்க மறுக்குது

பஞ்சணையில் சேர்ந்தவனின் உயிர் பிரிந்தது
பட்டும் படாமல் மனம் உணர்ந்தது

இல்லை இல்லை என்றபோதும் சிந்தை நொந்தது
இனி இல்லா உறவை எண்ணி கண்ணும் கசிந்தது

பின்னிசை பேரிசையாய் மாறி
தெளிவாய்க் கேட்குது ஒப்பாரி
ஓட்டத்தில் கொஞ்சம் கூடுது வேகம்
துடிப்பில் கொஞ்சம் குறையுது இதயம்

முற்றத்தைச் சென்றடைந்தாள்
சுற்றத்தாரை சுட்டுப் பார்த்தாள்
விலக்கி உள்ளே நுழைந்தாள்
கதவருகில் சென்று அதிர்ந்தாள்

அணை கடந்த வெள்ளம்போல
குருதி கடந்த இதயம் நின்றது
அடியற்ற மரத்தைப்போல
உயிரற்ற உடல் சாய்ந்தது

ஒருவருக்கும் தெரியாமல்
இத்தனை நாள் ஒன்றானீர்கள்
ஊருக்கே தெரிவித்து மகிழ
இன்று ஒன்றாய்ப் போனீர்கள்

கணவனும் மனைவியும்
ஒற்றைப் பாடையில்
உல்லாசமாய் இருவரும்
ஒற்றைக் கட்டிலில்

இருவரின் இனிமையில் ஓன்று பிறந்தது
இன்பக் கிளிக்கு ஆறரை வயது

தொலைவில் நின்று பார்க்குமவள்
தொண்ணூறின் அகதியாயானாள்

தந்தை தடையின்றித் தூங்குகிறார்
அன்னை ஆறுதலாய் உறங்குகிறாள்
தனக்கும் தூக்கம் வந்ததால்
இருவருக்கும் நடுவில் படுக்கிறாள்

பாட்டி அழுவதைக் கண்டதும்
தானும் வாயைத் திறக்கிறாள்
பயந்து தாயை அழைக்கிறாள்
அம்மா . . . . . அம்மா . . .

2009-10

No comments:

Post a Comment