Sunday, May 11, 2014

பௌர்ணமி நிலவாய்ப் பார்த்திடக் கேட்பேன்........


Share/Bookmark
அகிலம் வாழ்வோர்
அத்தனை பேரும்
அணியாய்த் திரண்டு
ஆசை கொண்டதனைத்தும்
அள்ளிக் கேட்டு

வள்ளலே - நீ
வாரிக் கொடுத்தாலும்

ஏகனே உந்தன்
எல்லையில்லா ஆட்சியில்

உலகைச் சூழ்ந்த
உப்புக் கடலில்

தவறிவிழுந்த
தையல் ஊசியில்

நின்று பிடிக்கும்
நீரின் அளவும்
நீங்கி விடாதே

நித்தியனே உன்னை
நித்தம் தொழுது
பித்தன் நான்
பிரார்த்திப்பதெல்லாம்

கவிதையாக்கி
காகிதத்தில் பதிகிறேன்

எனக்காக எல்லோரும்
தொழுவதற்கு முன்னரே
உனக்காக நான்
தொழுதிருக்கக் கேட்பேன்

தொண்டையில்
உயிர் பிரியும் போது
தொழுகையில் சிரம்
பணியக் கேட்பேன்

சாகும் போதும்
கலிமா கேட்பேன்
கலிமாவுக்ககவே
சாவைக் கேட்பேன்

புதைகுழிக்குள்ளே
பூவனம் கேட்பேன்
புதைப்பவரெல்லாம்
புண்ணகைக்கக் கேட்பேன்

மரங்களில்லாத‌
மஹ்ஷர் வெளியில்
நிலை பெற்றவனே - உன்
நிழலைக் கேட்பேன்

சுருங்கச் சொன்னால்
சுவ்னம் கேட்பேன்
சுவன பதியிலும்
சுந்தரி கேட்பேன்

அண்ணல் நபியோடு
அருகிருக்கக் கேட்பேன்
அண்ணார் கரம் பற்றி
அன்போடு முத்தமிடக் கேட்பேன்

பைந்தமிழ் சொல்லித்தந்து
பாவெழுதச் செய்தவனே - உன்னை
பௌர்ணமி நிலவாய்ப்
பார்த்திடக் கேட்பேன்........


09 05 2014