Sunday, December 21, 2014

ஆசிரியம் பற்றிய அரங்கக் கவிதை


Share/Bookmark
09122014

الحمد لله
والصلاة والسلام على رسول الله 
محمد ابن عبد الله
وعلى آل حزب الله

கலைமானிகளே!
கலாநிதிகளே!

முதுமானிகளே!
முதிர்ந்த ஞானிகளே!

பார்க்குமிடமெல்லாம்
பரவியிருக்கும்
பருவம் வராத ஞானிகளே!

ஆசிரியம் பற்றி
அழகுத் தமிழ் செய்து
அவைக்கு வந்தேன்

ஆனந்தம் ஆனந்தம்
அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்

அலிப் சொல்லித் தந்தவருக்கு
அடிமைப் பட்டேன்
அலியுரைத்த
அனுபவ வரியிவை

ஆசிரியம் செய்யவே - நான்
அனுப்பப்பட்டிருக்கிறேன்
அண்ணல் நபியுரைத்த
அமுத மொழியிது

ஆதமைப் படைத்த போது
அல்லாஹ் செய்த பணி
ஆசிரியம் ஆசிரியம்

வாழ் நாளை
வக்பு சொத்தாய்
வாரித்  தந்தோரே!

வாழ்த்த எப்படி
வார்த்தை கோர்ப்பேன்

நாய் பிழைக்கும் பிழைப்பு
நரகக் குழியின் விளிம்பு

நோய் பிடித்த உள்ளம்
நோக்கமற்ற பயணம்

நானும் எனதுமாய்
நகர்ந்து கொண்டிருக்க

நிறுத்தி என்னை
நிதானமாய் மாற்றியோரே!

பாவில் உங்களைப் பாட
பைந் தமிழோ போதாது
பாவலன் என்னால் முடியாது

ஏறி மிதிப்போர் எம்மிலிருக்க்
ஏந்திப் பிடித்தீர்

புண்படத் திட்டியோர் கண்டு
புண்ணகை செய்தீர்
காலால் உதைத்தோரை
கணப் பொழுதில் மன்னித்தீர்

சதி செய்து தோற்றோரை
ஸலாம் சொல்லி தண்டித்தீர்

முறைத்துப் பார்த்தோரை
முகமன் கூறி வரவேற்றீர்

அரச பணிகள்
அழைத்துச் சலிக்க

கூட்டம் சேர்ந்து
கூவியழைக்க

சர்வதேச சபைகள்
சகலதும் அழைக்க

தொழிலென்று கருதாமல்
தொண்டு செய்வோரே!

தொல்லையென்று கருதாமல்
தொடர்ந்து வருவோரே!

நீங்கள்
நிரந்தரமாய்க் கூலி பெற
நித்தியனைக் கேட்கின்றோம்

மாநபியின் பணியை
மறக்காமல் செய்வோரே!

பிரம்பின்றியே
பிழை திருத்தும்
பிள்ளை மனம் கொண்டோரே!

பிழையெல்லாம் மண்ணிக்க
பிள்ளை நான் மன்றாடுகிறேன்

தாவித் திரிந்த என்
தமிழுக்கு
தடையுத்தரவு விதித்தோரே!

கட்டுக்கடங்காத என்
கவிதைகளுக்கு
கலிமா சொல்லித் தந்தோரே!

ஆன்மீக வாழ்வுக்கு
அடித்தளமிட்டோரே!

ஆஹிரா வாழ்க்கையை
அடையாளம் காட்டியோரே!

அறபு மொழியை
அள்ளிவிதைத்து
அறிவுக் கோபுரத்தின்
அடித்தளமிட்டவரே!

கிளிப்பிள்ளை எனக்கு
கிழிந்த நூலெடுத்து
கிஸஸுன் நபிய்யீனை
கீதமாய்த் தந்தவரே!

மப்னி மாறாதென்றும்
மாறும் மற்றதென்றும்
நாவுளரக் கத்தி
நஹு சொல்லித் தந்தவரே!

தினம் தினம் தூங்கி
திடுக்கிட்டு விழித்தாலும்
திட்டாமல் தடவி
திசை காட்டும் ஆசானே!

அடைக்கலம் கேட்ட பொழுதெல்லாம்
ஆறுதல் வார்த்தை சொல்லி,

அறபு மொழிப் பிரிவில்
ஆழ்ந்த புலமை பெற
ஆழ்கடல் தாண்டிய
ஆசானை நினைவு கூர்ந்தவனாய்

நான் கேட்பதெல்லாம்
நல்லது செய்ய ஒரு யோசனை
நடு நிசியில் ஒரு பிரார்த்தனை
நடு நெற்றியில் சில முத்த மழை

கண்ணீர் பெருகும் இரவுகளின்
கடைசிப் பொழுதுகளில்
கரமேந்தும் தோழர்களே!

எமக்காகவே வாழ்ந்து மடியும்
ஏணிப் படிகளை மறவாதீர்

அவரவர் குடும்பத்தில்,
ஆனந்த இல்லத்தில்
சாந்தி நிலவக் கேளுங்கள்
சமாதனம் மலரக் கேளுங்கள்

அறிவுப் பாதையில்
அபிவிருத்தி கேளுங்கள்

பொருளாதார வாழ்வில்
பொருந்தி வாழக் கேளுங்கள்

கற்பித்த பொழுதுகள்
கணதியான பொருளாகி

மீஸானின் தட்டுகளில்
மிகைத்துவிடக் கேளுங்கள்

மறுமையில் அவர்கள்
மா நபியோடிருக்கக் கேளுங்கள்
அந்த வெயிற் பொழுதில்
அர்ஷின் நிழல் கேளுங்கள்

பௌர்ணமி நிலவாய்ப்
படைத்தவனைப் பார்க்கும்
பாக்கியம் கேளுங்கள்

மாணவ நண்பர்களே
மனதுக்குள்ளால் ஒருமுறை
மண்ணிப்புக் கேளுங்கள்

السلام عليكم ورحمة الله
إلى  اللقاء  إن  شاء  الله




No comments:

Post a Comment