என்னைவிடப் பெருவள்ளல்
பாரில் இல்லையென்பேன்
குடியிருக்க என் வீட்டை
வறுமைக்கே கொடுத்துவிட்டேன்
வாசலில் ஒதுங்கிக் கொண்டேன்
வறுமை என் வீட்டினுள் வாழுது
வறுமையின் வாசலில் நான்
வயதான தந்தையோடு
வறுமையும் படுத்துக் கொண்டது
வளம் குறைந்த தந்தைக்கு
வைத்தியச் செலவு கையிலில்லை
வடுப்பிடித்த கண்களை
வறுமை மூடிக் கொண்டதால்
வயதான தாயும்கூட
வளம் குறைந்து கிடக்கிறாள்
மூன்றே மாதத்தில் புது மனிதன்
வீட்டினுள் நுழைந்திடுவான்
மனைவிக்கு ஏழு மாதம்
வறுமை வந்து ஈரேழு வருடம்
குப்பி விளக்கில் என் பணம்
கொஞ்சமாய் எரியுதென்று இரவில்
விளக்கையும் அணைத்திடுவேன்
வறுமைக்கு அஞ்சி
வறுமைக்கு என்ன பிரியம்
என் வீட்டின்மீது
வந்து பலவருடமாச்சு - இருந்தும்
போக மறுக்குது பாவி
வறுமைக்கு என் வீடு
வசதியாய் இருந்திருக்கும்
வீட்டுக்குள் இருக்குது
வீட்டைவிட வாசலில் சுகம்
காற்று அதிகம் - ஆகவே நான்
வறுமையின் வாசலில்
வறுமை என் வீட்டுக்குள் வாழுது
வறுமையின் வாசலில் நான்
சிறு கற்பனையில் முளைத்த கவிதை ................
சட்டக் கல்லூரி கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை..............
2009-08-01
No comments:
Post a Comment