Thursday, February 7, 2013

றமழான் இம்முறையும் வருகிறது


Share/Bookmark



2011-07-23
பாதையோரமாய்
பதமாய் வீசிப்போன
அருளில் கணத்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்குள்
ஏதோ கக்கிச் சென்றது.

பக்கத்து அகதி முகாமில்
ஓட்டை விழுந்த
ஓலைப் பள்ளியில்
புதிதாய் இரண்டு பாய்
இரண்டாம் வரியில் விரித்தார்களாம்
முதல் வரி நிறைவதற்கும்
இன்னும் இரண்டு பேர் தேவையாம்

பள்ளிக்குப் பக்கத்தில்
பாத்திமா தாத்தாவின்
பளிங்கு மாடியில்
பர்தாவொன்று காயுதாம்
வந்து போன றமழானில்
இரவுத் தொழுகையில்
பார்த்த ஞாபகமாம்

பிர்தௌஸ் நாணாவின்
பின் வாசல் முற்றத்தில்
ஓரிரு முஸல்லாக்கள்
ஓராண்டின் பின்
முழுகிக் கொண்டிருந்ததாம்.

இப்படியெல்லாம் நடந்ததாய்
அருளில் நிறைந்த
அந்த நேற்றைய காற்று
என் காதுகளுக்கள்
ஏதோ கதறியழுதது . .. . .

அயல் வீட்டு வாசி
அண்வர் மாமாவும்
கொழும்புக்குப் போய்
குர்ஆன் வாங்கி வந்ததாய்
கடைசி மகன் சொன்னான்

பள்ளி இமாம் வாழும்
பச்சை வீட்டுக்குப் போயிருந்தேன்
நாளையோ மறுநாளோ
அதுவும் சுத்தமாகிவிடும்
.....
அந்த தூரத்தில் கிடந்த
தூசு படிந்த குர்ஆன்

மந்தமான அந்த இருளில்
மஃரிபு வேளை முடித்திருந்தேன்
வெளுத்திருந்த நேற்றைய தாடிகள்
மாம்பழ நிறத்தில் பழுத்திருந்தன.

நேற்று வந்த அதே நேரம்
இன்றைய காற்றும் வந்தது
........
இரண்டு நாட்களில் றமழானாம்
அதுதான் அவ்வளவு கொண்டாட்டமாம்
அழுது கொண்டே சொல்லிச் சென்றது.

திரும்பிப் பார்த்தேன்
பத்து மீட்டர் நீளத்தில்
பட்டியலொன்று கிடந்தது
பேரீத்தம் பழம் என்று
முதல் வரி எழுதப்பட்டிருந்தது

போன றமழானும் இப்படித்தான்
பிறையோடு வளர்ந்த ஈமான்
பிறை தேயத் தேய்ந்தே போனது
பெருநாள் விடியலில்
அழிந்தே போனது

இரண்டு கோப்பைக் கஞ்சியும்
இலவசப் பேரீத்தம் பழமும்
நோன்பு காலக் கொண்டாட்டங்கள்
கடைசிப் பத்தும்
கடைத் தெருக்களின் முகவரிகளாய். . . . .

காலங் காலமாய்க்
கடந்து போகுது றமழான்

நீயும் உனதும் - இன்னும்
ஜாஹிலிய்யா கடந்து வந்த
கல்லாயுத காலத்தில்

ஆள்காட்டி விரலுக்காய்
ஆளைக் கொல்வதும்
கரண்டைக் காலுக்காய்
கழுத்தைத் திருகுவதும்
கடைசி ரகஅத்தில்
கையேந்துவதற்காய்
கண்டந் துண்டமாய் வெட்டுவதும் . . .

றமழான் காலங்களுக்கான
சிறப்புக் கொண்டாட்டங்கள்

அழைப்பு நிலங்களின்
அழகிய முன்மாதிரிகள்

கட்டுண்ட செய்த்தானும்
கண்டு களிக்கும்
கேவலக் கூத்துகள்

இருபத்தி ஏழாம் இரவு மட்டும்
புனிதமாய்ப் போன றமழானில்
மற்றைய நாள் நோன்புகளெல்லாம்
ஆகுமாக்கப்பட்ட ஹறாமானது

அதிசயக் குர்ஆனும்
ஆச்சரித்து அழுதிருக்கலாம்

நானழுத அந்த இரவில்
எனது பேனைச் சாயமும்
உப்புக் கரித்தது

வருகின்ற றழமானை
வரவேற்கும் என் சமூகம்
வழியனுப்ப மறப்பதேனோ?
வழி தவறி நடப்பதேனோ?

பள்ளிக்கு வருவதற்கு
பருவம் வரவேண்டுமாகலாம்
புனித நேரம் வரவேண்டுமா?

அன்னல் நபி தந்த
அமுதங்கள் இவைதானா?
இறைவன் சொன்ன
இறை நேசம் இவ்வளவா?

No comments:

Post a Comment