Friday, June 14, 2013

ஏனும்மா . . . .


Share/Bookmark


ஏனும்மா . . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் அருந்தியதெல்லாம்
வெளிநாட்டில் வெந்த மாவை
வெள்ளையாய்க் கரைத்த
கரைசலும்மா வெறும்
பசிக்குத் திருப்தியும்மா

சொந்த ஊரில்
சொந்தப் பட்டியில்
எந்தை கறந்த பாலை
சூடாக்கி மோராக்கி
நீயருந்திப் பாலாக்கி
எனக்கூட்டலியே

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
தரும்போதும் தடுக்கலியே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்

நான் படுத்த திண்ணையெல்லாம்
தந்தைக்குச் சொந்தமில்லை
தற்காலிகத் தரிப்பிடம்தானே

எந்தையவன் தந்நாட்டில்
சொந்த நிலம் இல்லையா?
இருந்தும் இடமில்லையா?

உம்மா . . . .
நான் வேணாம்டு சொல்லலியே
கால் நீட்ட மறுக்கலையே

நான் குளித்ததெல்லாம்
நிறமில்லா நீரில்தானே
எம் முன்னோர் தாண்டெழுந்த
பெருங்காட்டுக் குளமல்லே

ஏனும்மா . . .
மூத்தவனாய் நானில்லை
நாலாவதாய் எனைப் பெற்றாய்
மூத்தவன் பெற்ற இன்பம்
காலில் துளியும் எனக்கில்லை.

2009-10

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் வெளியிட்ட 'தமிழ் நயம் - 2009' இதழில் வெளிவந்த கவிதை

No comments:

Post a Comment