Friday, June 14, 2013

என் கவிதையும் அழுதது


Share/Bookmark


ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

இருநூற்று நாற்பது கண்கள்
விதவையானதும்
ஒரே வீட்டில் தாயும் மகளும்
'இத்தா' இருந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

நூற்றி இருபது 'கப்று'கள்
ஒரே மண்ணில் தோண்டப்பட்டதும்
ஒரே நொடிப் பொழுதினில்
தந்தையும் மகனும் 'கலிமா' மொழிந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

விடுதலைப் புலிகள் வீரமிழந்து
முதுகில் சுட்டதும்
ஏகே போட்டிசெவன்கள்
தலை குனிந்து நின்றதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

புலியின் குணம் கண்டு
காட்டுப் புலி குனிந்ததும்
மனிதப் புலி மிருகம் என்று
ஊர் கூடிச் சொன்னதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

'ஷகீது'களுக்காய்
காத்திருந்த சுவனத்தில்
'ஷுஹதா'க்கள் நுழைந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

செந்நீர் வடிந்தும்
கண்ணீர் வடிக்காத
பாலகர் இறந்ததும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

தொழுகைத் தளங்களில்
இரத்தம் வடிந்ததும்
ஹசன் ஹுசைன்கள்
ஷஹீதாய் ஆனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

பள்ளி நிலம்
செம்மையானதும்
வெள்ளி நிலா
வெளிறிப் போனதும்

காத்தான்குடியில்
அன்றைய இரவிலேதான்

ஒரு சில இரவுகளில்
நாணும் மீட்டிப் பார்ப்பேன்
அந்த ஒரேயொரு இரவுதனை

அந்த இரவிலே
காத்தான்குடி அழுதது
கப்றுக்குழி அழுதது

ஷுஹதாக்களால்
சுவனம் நிறைந்தது
ஷஹீதுகள் இன்றி
பூமியும் அழுதது

ஒரு சில இரவுகளில்
நாணும் அழுவதுண்டு
அந்த ஒரேயொரு இரவுக்காய்

பல நாள் கண்ணீர்
அன்று கவிதையாய் எழுந்தது
நேற்று இரவுக் கண்ணீரில்
பாதிக்கவி கரைந்தது
மீதிக் கவி இன்று
உங்களுக்காய்

அந்த இரவில்
பூக்களும் அழுதன
என்னோடு
என் கவிதையும் அழுதது

கல்நெஞ்சக் காறரே!
இன்றேனும் கொஞ்சம்
அழுது விடுங்கள்
இன்றைய இரவில்
காத்தான்குடியை
மீட்டிப் பார்ப்பேன்

2009-11-19

No comments:

Post a Comment