உம்மா . . . .
உன்னைத் தினம் காண்கிறேன்
உன் அகத்தின் அழகு
முகத்தில் தெரியுதும்மா
இன்னும் என்னை
குழந்தையாய் நினைக்கிறாய்
இரவு பகல் அழுவதை
அகத்தினிலே புதைக்கிறாய்
முகத்தினிலே சிரித்து
உன்னை மழுப்புகிறாய்
கண்ணீர் நனைத்த
முந்தாணையை முட்டியில்
விழுந்ததென்கிறாய்
நம் வீட்டு முட்டியில்தான்
உப்பு உற்பத்தியா?
எந்தையை வாட்டும் அந்த
உன்னதக் கவலைதான்
உன்னையும் வாட்டுதா?
ஊருக்குப் போகத்தான்
உன் உள்ளம் ஏங்குதா?
ஊரைப் பற்றி நானறிவேன்
எந்தையவன் உளறிவிட்டான்
விரட்டியோரைச் சொல்லிவிட்டான்
கயவர்களைக் காட்டி விட்டான்
உன் அழுகை புலம்பலெல்லாம்
என் ஏட்டில் கவியாகும்
நீ வடிக்கும் விழிநீர் சொட்டும்
என் பேனை மையாகும்
நான் எழுதும் ஓரெழுத்தும்
வன்னிக்குப் போர் தொடுக்கும்
போர் தொடுத்த இடமெல்லாம்
நம்மவர்க்கு உரித்தாகும்
எந்தையின் எழுத்தெல்லாம் வான்படை
உன் விழி கொட்டும் நீர் கடற்படை
என் எழுத்து, கவியெல்லாம் தரைப்படை
மொத்தம் முழுப் போரில் அமைதிப்படை
2009-10
No comments:
Post a Comment