Friday, June 14, 2013

தொண்ணூறை மீட்கட்டும்


Share/Bookmark
அகதி நாமம் கொண்ட
ஆன்மீகக் கவிஞன்
அகத்திமுறிப்பானின்
ஆசை மகன் நான்

வேத்திய நாமம் கொண்ட
வேங்கைக் கவிஞன் நான்

தாய் மொழியாய்
தமிழைக் கொண்டு
வடக்கையே என்
தாயாய்க் கொண்டு

நான் எழுதும் இவ்வரிகள்
தொண்ணூறை மீட்கட்டும்

பதினெட்டாண்டுகள்
பழமை வாய்ந்தும்
பளிச்சென்று தெரியும்
பழங்குடிக் கதையையும்
பாழ் கிணற்றில் நாம் வீழ்ந்து
பாழாய்ப்போன கதையையும்

நான் எழுதும் இவ்வரிகள்
நன்றாகவே மீட்கட்டும்

பத்தடித் தூண் கட்டி
அரைவட்ட வாசல் இட்டு
வண்ணமாய் நிறந் தீட்டி
பச்சை நிறச் சுவர் காட்டி

வாவென்று அழைத்திடவே
'பாங்கு' சொல்லும் பள்ளிகள்
வழமையாகச் சொல்லுது 'பாங்கு'
வானுயர எல்லோர் ஊரிலும்

போவென்று சொன்னதாக
சரித்திரம் இல்லை
வந்தோரைத் தடுத்ததாக
வாக்கியங்களும் இல்லை

தொண்ணூறைத் தவிர
ஏனைய நாட்களிலே

' இரு மணித்தியால அவகாசம்
உயிர் பிழைக்க உங்களுக்கு
ஓடிச் செல்லுங்கள்
ஊர் எல்லை தாண்டி'
'மோதினார்' மூக்காலே பேசுகிறார்
என்னுயிர் பிழைக்க
நானும் ஓடுகிறேன்

ஊர் மக்கள்
ஒன்றுகூட நேரமில்லை
ஒன்றுவிடாது
அடுக்கி எடுக்க நேரமில்லை
உடுத்த உடையோடு
உடுக்க உடை எடுத்து
வாலிபர்கள் சுமக்க பெண்களும் போறார்
கர்ப்பினிகளுடன் தாய்மாரும் போறார்
தந்தையோடு மகனும் போறார்
மகனோடு தந்தையும் போறார்
போன தந்தை திரும்பிப் பார்க்கிறார்

தாய் படுக்கும் இடம் பார்க்கிறார்
நாயும் பயந்து ஒதுங்குகிறது
பிறந்த மண்ணைப் பார்க்கிறார்
வளர்ந்த காலம் மீட்கிறார்
வஞ்சினம் கொள்கிறார்
பயனில்லை நடக்கிறார்

ஏ வடக்கின் வாலிபர்களே!
முடிச்சு தூக்கியதால்
முதுகெலும்புகள் வளைந்தனவோ
அன்றி
ஆன்மீகம் குறைந்ததனால்
ஆண்மையையும் இழந்தீரோ

வேளை வந்துவிட்டது
புறப்படுவோம் நாம்
நம் தாயகம் காக்க

2008-11-03


எங்கள் தேசம் (ஜுலை 15-31, 2009) 153 வது இதழில் வெளிவந்த கவிதை

No comments:

Post a Comment